எப்போது தீரும் இந்தக் கொடுமை..வாக்குறுதியை மீறிய இலங்கை - ராமதாஸ்!
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் சிங்களக் கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருவவதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைது
2025-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுடன் 41 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை 77 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 7 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடைமையாக்கபட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 71 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 111 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குச் சொந்தமான 218 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதும், அதற்கு நிரந்தரத் தீர்வு காணாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மீனவர்கள் நலனுக்கும், இந்திய இறையாண்மைக்கும் எந்த வகையிலும் வலு சேர்க்காது. இந்த சிக்கலுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கை
அதுமட்டுமின்றி, இரு நாட்டு மீனவர் அமைப்புகளின் பேச்சுகளுக்கு விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை இலங்கைத் தரப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால், அதன்பின் 100 நாட்களுக்கு மேலாகியும் இந்த இரு வாக்குறுதிகளையும் இலங்கை அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை.
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச வேண்டும். மீனவர்கள் நலன் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.