வீட்டை இடித்ததால் இளைஞர் தீக்குளிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை - ராமதாஸ்!
திமுக ஆட்சியில் நேர்மையான ஏழைகள் வாழ முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான வீட்டு உரிமையாளர் ராஜ்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமான அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில்
ஏழைகள் வாழ முடியாது
அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள், பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் வீட்டை இடிக்க துடிப்பது ஏன்? அவர்களை தூண்டி விட்டவர்கள் யார்? திமுக ஆட்சியில் சட்ட விரோதமாக செயல்படக்கூடிய பணக்காரர்கள் மட்டும்தான் வாழ முடியும், நேர்மையான ஏழைகள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருப்பதையே கும்மிடிப்பூண்டி நிகழ்வு காட்டுகிறது.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் ஏழைகள் வாழவே முடியாது. கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் ராஜ்குமாருக்கு தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.