வலைவிரிக்கும் அதிமுக, பாஜக - எந்த பக்கம் சாய்வார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்?
பாமகவின் கூட்டணி முடிவு குறித்து நாளைக்குள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் பாமக எந்த பக்கம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதற்கிடையில் டாக்டர் ராமதாஸை அதிமுக தரப்பில் சி.வி. சண்முகம் 2 முறை சந்தித்து பேசினார். அப்போது 7 தொகுதிகள் வரை பாமகவுக்கு கொடுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜக தரப்பிலும் பாமகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
பாமக எந்த பக்கம்?
மேலும், இன்று சென்னை வரும் டாக்டர் ராமதாஸை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தமிழகத்தில் பாமகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும், அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மத்தியில் மோடி ஆட்சி அமைந்தால் டெல்லியில் பொறுப்புகள் கிடைக்கலாம்.
இதன் மூலம் கட்சியையும் பலப்படுத்த முடியும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே எந்த பக்கம் சாய்வது? என்ன முடிவெடுப்பது என்ற தடு மாற்றத்துடன் பாமக இருக்கிறார்கள். நாளை வரை காத்திருக்கும்படி அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருப்பதால், நாளைக்குள் பாமகவின் முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.