மக்களவை தேர்தல்: பாஜக - பாமக கூட்டணி உறுதியானது - எத்தனை தொகுதிகள்?
பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக முடிவு செய்துள்ளது.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மக்களவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த மாதம் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.
பாஜக - பாமக
அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் "பாமகவின் எதிர்கால நலனை முன்னிட்டும், இத்தேர்தலில் பாமக வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் சிறந்த செயல்பாட்டுக்கான கூட்டணியுடன் இந்த தேர்தலை பாமக சந்திக்க உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாமக முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.