உ.பி.-யில் பிரமாண்டமாய் நடக்கும் மகா கும்பமேளா.. புனித நீராடும் பிரதமர் மோடி - எப்போது தெரியுமா?
திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடா உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு மகா கும்பமேளா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது. மேலும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும்.
இந்த பிரம்மாண்ட திருவிழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல கோடி பக்தர்கள் கலந்துகொண்டனர். கடந்த 13ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா நிகழ்வு வரும் 26ஆம் தேதி நிறைவடைகிறது.
இதுவரை கும்பமேளாவில் 35 கோடிக்கும் அதிகமானோர் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகா கும்பமேளாவில் பங்கேற்றார். இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் நாளை காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் பிரதமர் மோடி புனித நீராட உள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் வருகையைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, சிறப்பு பாதுகாப்புக் குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பராமரிக்கப்படுகிறது. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க கடுமையான கண்காணிப்பு நடைமுறையில் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.