இனி தேடினாலும் திமுக கிடைக்காது - பிரதமர் மோடி ஆவேசம்
வெறுப்பு அரசியலை பரப்பும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அகற்றப்படவேண்டும் என நெல்லையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நெல்லையில் மோடி
இந்தியா பிரதமர் மோடி, இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். 2-வது நாளான இன்று தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்து கொண்டு திருநெல்வேலி சென்றவர் அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது வருமாறு,
எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியத் தெளிவுடன் தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தோடு பாஜக'வின் சித்தாந்தம் ஒத்துப்போகிறது.எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் திறக்கவிருக்கிறோம், இதன் மூலம் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் தூரம் குறைந்துவிட்டது.
நாட்டை கொள்ளையடிக்கவே திமுக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பே கொடுக்காத அரசு தான் இங்கு இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்வீர்கள் என்று கேளுங்கள், பதில் இருக்காது. ஆனால், அடுத்து யாரை முதல்வராக்கப் போகிறார்கள் என்று கேட்டால் மட்டும் நன்றாகத் தெரியும்.
அண்ணாமலை வந்துவிட்டார்
தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு, வெறுப்பு அரசியலைப் பரப்புகிறார்கள். இந்தி வேறு, தமிழ் வேறு என்று பேசும் இந்த அரசை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. இனிமேல் திமுக இருக்க முடியாது. அண்ணாமலை வந்துவிட்டார்,
திமுக'வை நீங்கள் இனி தமிழ்நாட்டில் எங்கு தேடினாலும் கிடைக்காது. திமுக' வில் தந்தை, மகன், பேரன் என குடும்ப அரசியல் நடக்கிறது. நாட்டையும், மக்களையும்விட தங்கள் குடும்பத்தை முக்கியமாக நினைக்கிறார்கள்.
இம்முறை தமிழ்நாடு அவர்களை நிராகரிக்கும். உங்கள் முன், தமிழ் மொழியில் பேசமுடியவில்லை என்ற ஏக்கம் எனக்கிருக்கிறது, உங்கள் அன்புக்குத் தலைவணங்குகிறேன் என்று பேசி தனது உரையை முடித்தார் பிரதமர் மோடி.