நான் மீண்டும் பதவியில் அமர்வேன்; திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது - பிரதமர் மோடி!
நெல்லை மக்களின் ஆசியோடு மூன்றாவது முறையாக நான் பதவியில் மீண்டும் அமர்வேன் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பொதுக்கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "திருநெல்வேலி அல்வாவை போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள்.
பூலித்தேவன், ஒண்டிவீரன், சுந்தரலிங்கனார், கப்பலோட்டிய தமிழன் வஉசி, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மண், நெல்லை மண். தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள் . உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம். பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழ்நாடு மக்களுடன் ஒத்துப்போகிறது.
பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி. தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி கேட்டால் திமுகவினரிடம் பதில் இருக்காது. எனக்கு தமிழ்மொழி தெரியாது. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கின்றேன்.
மோடி தரும் உத்தரவாதம்
சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவி வகிக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது.
குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். திமுக தமிழ்நாட்டை சுரண்டுவது போல, காங்கிரஸ் இண்டியா கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். குடும்ப அரசியல் தான் தலைதூக்கியுள்ளது. எந்த திட்டமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது.
பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒரே எண்ணமாக இருந்து வருகிறது. தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என உத்தரவாதம் அளிக்கிறேன். நெல்லை மக்களின் ஆசியோடு மூன்றாவது முறையாக நான் பதவியில் மீண்டும் அமர்வேன். நீங்கள் உழைப்பது போல பல மடங்கு நான் உங்களுக்காக உழைப்பேன் இது மோடி தரும் உத்தரவாதம்" என்று பேசியுள்ளார்.