3வது முறையும் வெற்றி..கங்கை அன்னையின் தத்து பிள்ளை நான் - பிரதமர் மோடி பெருமிதம்!
கங்கை நதி அன்னை தத்தெடுத்துக் கொண்டுவிட்டார் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் விவசாயிகளுக்கான நிதி வழங்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிதி பிஎம் கிசான் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் 17-வது தவணைத் தொகையை 9.26 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் மோடி விடுவித்தார். அப்போது, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேளாண் தோழிகள் என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதில் உரையாற்றிய அவர், வாரணாசி (காசி) நாடாளுமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, முதல் முறையாக இங்கு வந்திருப்பதாகவும் காசி மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கங்கை அன்னை
தொடர்ந்து மூன்றாவது முறையாக தம்மைத் தேர்வு செய்ததற்காக அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இப்போது கங்கை அன்னை கூட தம்மைத் தத்தெடுத்துள்ளது போல தமக்குத் தோன்றுவதாகவும் தாம் காசியைச் சேர்ந்த உள்ளூர்வாசியாக மாறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் முடிவடைந்த 18-வது மக்களவைப் பொதுத் தேர்தல்கள், இந்திய ஜனநாயகத்தின் பரந்து விரிந்த தன்மை, ஜனநாயகத்தின் திறன்கள், அதன் ஆழமான வேர்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதாக அமைந்தது.
இந்தத் தேர்தல்களில் 64 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இதுபோன்ற பெரிய அளவிலான தேர்தல் வேறு எங்கும் நடைபெறவில்லை என்று கூறினார்.