சூடுபிடிக்கும் தேர்தல் களம்; மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை - சென்னையில் பரப்புரை!
தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் களம்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பாஜக தமிழகத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக, வருகிற 9-ந்தேதி, சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மோடி தமிழகம் வருகை
சென்னையில் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பரப்புரையாற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கான, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பது குறிப்பிட்டத்தக்கது.