சண்டை முடியுமா? 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி!
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சந்தித்துப் பேச உள்ளனர்.
BRICS மாநாடு
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா சென்றார். அங்கு அவருக்கு ரஷ்யா அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,கடந்த 3 மாதங்களில் ரஷ்யாவுக்கு நான் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது. நமது நெருக்கத்தையும், ஒருங்கிணைப்பையும், ஆழமான நட்பையும் இது பிரதிபலிக்கிறது.
கடந்த ஜூலை மாதம் மாஸ்கோவில் நடந்த வருடாந்திர உச்சி மாநாடு அனைத்து துறைகளிலும் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.கடந்த 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அதன் சிறப்பு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இப்போது உலகின் பல நாடுகள் இதில் சேர விரும்புகின்றன என்று தெரிவித்து இருந்தார்.
சீன அதிபர் சந்திப்பு
மேலும் ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவும் மோதல்கள் அனைத்தும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று விளாதிமிர் புதின் உடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சந்தித்துப் பேச உள்ளனர். இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் எல்லைப் பகுதியில் வீரர்கள் ரோந்து பனியில் ஈடுப்படுவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.