சிக்கலில் இந்திய அணி; விராட் கோலியால் பெரும் கவலை - பிளேயிங் 11-ல் மாற்றம்?
இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் குரூப் 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் கனடாவிற்கு எதிரான குரூப் 'ஏ' போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், சூப்பர் 8 சுற்று போட்டிகள் முழுவதும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது.
அங்குள்ள பிட்ச்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இதனால் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
குல்தீப் யாதவ்
இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். இதனால் மீண்டும் விராட் கோலி 3-ம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் யோசனை கூறியுள்ளனர்.
அப்படி அவர் மூன்றாம் வரிசைக்கு சென்றால் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட வேண்டும். அவரை சேர்க்கும் பட்சத்தில் வேறு ஒரு வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும். ஆனால், இந்த மாற்றத்தை செய்தால் அணியின் சமநிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் விராட் கோலி தொடர்ந்து துவக்க வீரராகவே களமிறங்குவார் என்றே தெரிகிறது.
பந்து வீச்சில் வேண்டுமானால் முகமது சிராஜ் நீக்கப்பட்டு கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது.