பிச்சைக்காரன் படம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகள் - ஏதோ சம்மந்தம் இருக்கு!
பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் தற்பொழுது வெளியான நிலையில் ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவித்தது பேசுபொருளாகி உள்ளது.
செல்லாத நோட்டுகள்
தற்போது திடீரென நேற்று மாலை ரிசர்வ் வங்கியானது தங்களது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.
இருப்பினும் செப்டம்பர் 30 வரை இது செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது. இதற்கும் நடிகர் விஜய் ஆண்டனிக்கும் எதிர்பாராத வகையில் ஒரு தொடர்பு இருப்பதாக தெரிகிறது என்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு பிச்சைக்காரன் படம் வெளியாகி, கிட்டத்தட்ட 45 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பிச்சைக்காரர் ஒருவர், 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என கூறுவார்.
அதை ஒழித்தால் நாட்டில் பிச்சைக்காரர்கள் கூட இருக்க மாட்டார் என கூறுவார். அதன் பின்னர் சரியாக 8 மாதம் கழித்து நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், அது மட்டுமின்றி அன்று முதல் புதிய இந்தியா பிறந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்பு
இதனை தொடர்ந்து, தற்பொழுது பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் வெளியான இதே நாளில் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இவை நகைச்சுவை கலந்த பேசு பொருளாகியுள்ளது. எப்படியோ, பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு இதுவும் ஒரு இலவச ப்ரோமோஷன் போலவே அமைந்துள்ளது.
பிச்சைக்காரன் 3 ஆம் பாகம் வெளியானால், அப்போது அரசிடம் இருந்து என்ன அறிவிப்பு வரப்போகிறது என்று சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.