உதயநிதி ஸ்டாலின் அந்த தகுதியை இழந்துவிட்டார் - உயர்நீதிமன்றத்தில் மனு!
அமைச்சர் உதயநிதி பதவியில் இருக்கும் தகுதி இழந்தார் என்று கூறி உயர்நநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சனாதனம்
தமிழகத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி த.மு.எ.க.ச சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்திற்கு எதிராக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராஜா ஆகியோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று ஆதரவாக பேசினர்.
இதனால் அவர்கள் எவ்வாறு பதவியில் தொடர்கிறார்கள் என்று விளக்கம் கேட்டு இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் டி.மனோகர், ஜே.கிஷோர் குமார் மற்றும் வி.பி. ஜெயக்குமார் ஆகியோர் தனிப்பட்ட முறையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனு தாக்கல்
இந்நிலையில், மனுதாரர், "ஒரு எம்.எல்.ஏ அல்லது ஒரு அமைச்சராக, அவர் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனின் பிரதிநிதியாகவும், எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் பதவியை வகிப்பவராகவும் இருக்க வேண்டும், மேலும், மாநிலத்தின் பெரும்பான்மையான குடிமக்களின் நம்பிக்கைகள் மற்றும் நம்பிக்கைகளை ஒழிப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்பது அல்லது சிறுபான்மையினர் நம்பிக்கைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்பது அவர் எடுத்த சத்தியப்பிரமாணத்திற்கு எதிரானது.
அதனால் அவர் அமைச்சராக இருப்பதற்கான தகுதியை மட்டுமல்ல, எம்.எல்.ஏ.வாகவும் இருப்பதற்கான தகுதியை இழக்கிறார்” என்று கூறியதுடன் இதற்கு சட்ட நிவாரணம் அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், சனாதனத்தை சமூக இழிவுபடுத்தும், டெங்கு, மலேரியா, எச்.ஐ.வி மற்றும் தொழுநோய் போன்ற நோய்களுக்கு இணையாக ஒப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராஜா ஒரு கூட்டத்தில் கூறியதையும் கூறியுள்ளனர். “நாடாளுமன்ற உறுப்பினரின் செயல் அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் எதிரானது, அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது" என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.