2 நாள் அங்கேயே சிறுநீர் கழித்தேன்..கத்தி அழுதேன் - லிப்டில் சிக்கிய நபரின் துயர அனுபவம்!
2 நாள் லிப்ட்டில் சிக்கி மீட்கப்பட்டவரின் துயர அனுபவம் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
லிப்ட்டில் சிக்கிய நபர்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்காக ரவீந்திரன் நாயர் (59) என்பவர் சென்றுள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் இருந்த லிப்ட் நடுவழியில் நின்றதால் ரவீந்திரன் சிக்கி கொண்டார்.
வெகு நேரமாகியும் ரவீந்திரன் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த நிலையில், 2 நாட்களாக செயல்படாமல் இருந்த லிப்ட் நேற்று சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது.
அப்போது தான் ரவீந்திரன் லிப்ட்டுக்குள்ளேயே 2 நாட்களாக சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார். 2 நாட்களாக லிபிட்டிற்குள் சிக்கியிருந்த மோசமான அனுபவங்களை உயிர் பிழைத்த ரவீந்திரன் பகிர்ந்துள்ளார்.
துயர அனுபவம்
எனது அலைபேசியைப் பயன்படுத்தி லிப்ட்டுக்குள் இருந்த அவசர உதவி எண்களை அழைத்தேன். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் அலைபேசி கீழே விழுந்து வேலை செய்வதை நிறுத்தியது. லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன்.
அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன் பிறகு, இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை விடுமுறை நாள் என கருதி உதவிக்காக காத்திருந்தேன். ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில சமயம் சத்தமாக அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை.
எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன். தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தேன். லிப்ட் அறையில் மின்விசிறி அல்லது வெளிச்சம் இல்லை என்றாலும், காற்று நுழைய இடம் இருந்ததால் என்னால் மூச்சு விட முடிந்ததுஎன்று தெரிவித்தார்.
இதனையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்த 2 லிப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.