சரக்கு வாகனம் மோதியதில் பெரியார் சிலை சேதம்..!
நாமக்கல்லில் மினி சரக்கு வாகனம் மோதியதில் பெரியார் சிலை சேதமடைந்தது.
பெரியார் சிலை சேதம்
நாமக்கல் நகரில் உள்ள பிரதான சாலையில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் உள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் இந்த சிலைகள் நிறுவப்பட்டன.
இந்நிலையில் நாமக்கல் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலை நேற்று மாலை திடீரென சேதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போலீசார் விசாரணை
இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, மினி சரக்கு வாகனம் ஒன்று சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது.
உடனடியாக மினி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நல்ல பாளையத்தை சேர்ந்த அருண் (32) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது, டிரைவர் சரக்கு வாகனத்தில் டீசல் பிடிக்க வந்த போது எதிர்பாரத விதமாக சிலை மீது வாகனம் மோதியதால் சிலை சேதமடைந்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.