பெரியார் தாடியின் ரகசியம் தெரியுமா? அப்படி என்ன செய்துவிட்டார் - ஏன் இன்றும் பேசுபொருளாகிறார்!
பெரியாரின் 145ஆவது பிறந்த நாளான இன்று அவர் குறித்த சில தகவல்களை தெரிந்து கொள்வோம்..
பெரியார் 145
ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த பெரியாருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராமசாமி. இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரரும், கண்ணம்மா, பொன்னுத்தாயி, என்ற சகோதரிகளும் இருந்தனர்.
12 ஆவது வயதில் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். 19வயதில் நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை 5 மாதத்தில் இறந்து விட்டது.
அரசியலின் ஆர்வம் மூலம் 1919ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1922ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசுப்பணி, கல்வியில் இடஒதுக்கீடை ஏற்படுத்த காங்கிரஸ் மறுத்ததால் 1925ல் காங்கிரஸ் இருந்து வெளியேறினார்.
சமூக நீதி
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு கடவுள் மறுப்பு என தீவிரமாக செயல்பட்டார். ராஜாஜி ஆட்சி காலத்தில் இந்தி திணிப்பு எதிராக நீதிக்கட்சி சார்பில் போராடி 1938ல் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் தனக்கு பிறகு கழகத்தின் சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று எண்ணி மணியம்மையை ஏற்க முடிவு செய்தார்.
அப்போதைய இந்திய சிவில் சட்டத்தின் படி ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமை இல்லை. இரத்த உறவுகளுக்கு மட்டுமே வாரிசாக ஏற்கும் வகையில் சட்டம் இருந்தது. பெரியாரின் மனைவி நாகம்மை ஏற்கனவே மறைந்திருந்தார். தன்னை விட 40 வயது இளைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். அப்போது இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இன்றுவரை பெரியாரின் கருத்து எதிரான கருத்துகளை கொண்டவர்கள் முதலில் விமர்சிப்பது அவரது திருமணத்தையே. வாழ்நாள் முழுவதும் பெண்களின் கல்விக்காகவும், சுயமரியாதைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடினார். இதற்கிடையில் அவர் ஏன் எப்போதும் தாடியோடு இருந்துள்ளார் என பலருக்கு தோன்றும்.
அதற்கு அவர் அளித்த பதில் தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டு விட்டேன். அது தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இறுதியில் 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணம் அடைந்தார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகளான நிலையிலும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு நகர்விலும், அரசியலிலும் அவரது கருத்துகள் நின்று பேசுகிறது!
மதம் மனிதனை மிருகமாக்கும்.. சாதி மனிதனை சாக்கடையாக்கும் - பெரியார்