கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம் - தமிழ்நாட்டிலிருந்து வந்த பரிசு
கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றார். இதுதொடர்பாக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் கங்கனாவை அடித்தவர் விமான நிலையத்தில் பணியில் இருந்த குல்விந்தர் கவுர் என்று தெரிய வந்துள்ளது. தற்பொழுது அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
குல்விந்தர் கவுர்
விசாரணையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை தவறாக பேசியதால் தான் அடித்தேன் என குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார். இ
தனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் பேசி வந்தாலும், பெண் காவலருக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளதோடு பரிசு பொருட்களை அறிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் தொழிலதிபர் 1 லட்சம் வெகுமதி, பிரபல இசையமைப்பாளர் வேலை தருவதாக கூறி உள்ள நிலையில், தற்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தங்க மோதிரம் பரிசு
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, விவசாயிகளுக்கு ஆதரவாக நின்ற குல்விந்தர் கவுரைப் பாராட்டுவதற்காக திங்கள்கிழமை எட்டு கிராம் தங்க மோதிரத்தை அவரின் வீட்டு முகவரிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கூரியர் சேவைகள் தங்க மோதிரத்தை ஏற்கவில்லை என்றால், தங்கள் உறுப்பினர்களில் ஒருவரை அவரது வீட்டிற்கு ரயில் அல்லது விமானம் மூலம் அனுப்பி, பெரியார் முகம் பதித்த மோதிரத்தை, சில புத்தகங்களுடன் ஒப்படைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.