கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் காவலருக்கு வேலை தர தயார் - பிரபல இசையமைப்பாளர் ஆதரவு
விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரணாவத்தை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்கனா ரணாவத்
சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் கங்கனாவை அடித்தவர் விமான நிலையத்தில் பணியில் இருந்த குல்விந்தர் கவுர் என்று தெரிய வந்துள்ளது. தற்பொழுது அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
குல்விந்தர் கவுர்
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்துகொண்டிருந்தபோது அதில் எனது அம்மாவும் இருந்தார். அப்போது கங்கனா ரனாவத் `போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் 100 ரூபாய்க்காக அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள்' எனக் கூறி, தொடர்ந்து விவசாயிகளை அவமரியாதை செய்துவந்தார். அதற்காகதான் நான் அவரை அடித்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் குல்விந்தர் கவுர்.
இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே பஞ்சாபை சார்ந்த தொழிலதிபர் குல்விந்தர் கவுரை பாராட்டி ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அளிக்க முன் வந்துள்ளார்.
விஷால் தத்லானி
இந்த நிலையில், கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நான் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் நிச்சயமாக அந்த காவலரின் தனிப்பட்ட கோபத்தின் தேவையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்காக வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன். ஜெய்ஹிந்த். ஜெய்ஜவான். ஜெய் கிசான்” என்று விஷால் தத்லானி தெரிவித்துள்ளார்.
விஷால் தத்லானி இந்தியில் ரா1, ஃபைட்டர், ஓம் சாந்தி ஓம் என பல படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிட தக்கது.