கவனம் பெரும் பெரம்பலூர் தொகுதி - பாரிவேந்தர் vs அருண் நேரு..யாருக்கு சாதகம்..?
மக்களவை தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது கட்சிகள்.
மக்களவை தேர்தல்
தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியே தற்போது வரை வலுவான கூட்டணியாக இருக்கின்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து 21-சட்டமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணியே தொடரும் காரணமும் ஒரு பிளஸ் பாய்ண்ட்.
சென்ற முறை, திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அவர் மொத்தமாக 6,83,697 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை விட 4,03,518 வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார்.
இம்முறை பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு சென்றுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு செல்வாக்கான இடமாக கருதப்படும் பெரம்பலூர் தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்படுகிறது.
அதே நேரத்தில், இம்முறை திமுக தரப்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் பெரும் செல்வாக்கை கொண்டுள்ள கே.என்.நேருவின் முகம் அவரது மகனுக்கு பெருமளவில் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
பாரிவேந்தர் கடந்த முறை பெற்ற வெற்றியில் பெரும்பகுதி உதயசூரியன் சின்னத்தை தான் சேரும் என்பதில் மாற்றுக்கருதிலளி என்றாலும், பாரிவேந்தரின் செல்வாக்கு இம்முறை திமுகவிற்கு போட்டியாக அமையலாம்.
அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சந்திரமோகன். திருச்சி புறநகர் பகுதிகளால் செல்வாக்கான நபராக இருக்கும் சந்திரமோகனும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சூழலில் அவரும் கணிசமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.