ஆந்திர அரசியலின் கேம் சேஞ்சர் - அமைச்சரான பவன் கல்யாண் - கடந்து வந்த பாதை!!
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் - ஜன சேனா - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
கேம் சேஞ்சர் பவன்
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியாக திரையில் அறிமுகமாகினார். அடுத்தடுத்த வெற்றி படங்கள். வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. ஸ்டார் அந்தஸ்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி பவர் ஸ்டாராக மாறினார்.
2008-ஆம் ஆண்டு சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சி துவங்கிய போது, அவருக்காக தீவிர பிரச்சாரத்தில் கட்சியின் நிர்வாகியாக வேலை பார்த்தார் பவன் கல்யாண். ஆனால், சிரஞ்சீவியால் தேர்தல் அரசியல் வெற்றி பெற முடியவில்லை. கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினார். அதனை ஒப்புக்கொள்ளாத பவன், அண்ணனிடம் இருந்து ஒதுங்கினார்.
2014-ஆம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியை துவங்கினார். நடிகர் தானே, அரசியலில் தோல்வி தான் என பலரும் கணக்கிட்டார்கள். அதுவும் சற்று நிறைவேறியது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை சுவைத்து ஆட்சி அமைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அந்த தேர்தலில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜன சேனா படுதோல்வியை சந்தித்தது.
ஆனால், பவன் கல்யாண் துவண்டு போகவில்லை, தொடர்ந்து போராடினார். மக்களை சந்தித்தார். ஆட்சி செய்யும் அரசை கடுமையாக சாடினார்.
கூடவே அவரின் சினிமா நட்சத்திர அந்தஸ்து கை கொடுத்தது. ஜெகன் மோகன் ரெட்டி அரசால் ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைதான நிலையில், அவரை சந்திக்க சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில்,இரவில் நடுரோட்டில் போராட்டம் நடத்தினார் பவன் கல்யாண்.
அன்று இரவு தான் ஆந்திர அரசியல் பெறும் மாற்றத்தை கண்டது. சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணியை ஜெயிலில் சந்தித்து பேசி உறுதிசெய்தார். அதே வேகத்தில், 2019-இல் உடைந்த பாஜக - தெலுங்கு தேசம் கட்சிகளை இணைத்தார். பிரச்சாரத்தில், ஜெகன் உன் கட்சியை பாதாளத்திற்கு தள்ளவில்லை என்றால் என் பெயர் பவன் கல்யாண் அல்ல, என் கட்சி ஜன சேனா இல்லை என ஆக்ரோஷமாக பேசிய பவன் கல்யாண், கூட்டணியில் 21 எம்.எல்.ஏ இடங்களிலும், 2 எம்.பி இடங்களிலும் போட்டியிட்டார்.
ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சி இடத்தை கூட பிடிக்கமுடியாமல் வெறும் 11 இடங்களை மட்டுமே வென்றது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று, தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ளார் பவன்.
விமர்சகர்களின் கருத்தை பொய்யாக்கி, அண்ணன் சிரஞ்சீவியால் செய்ய முடியாத அரசியல் வெற்றியை பெற்று அரியணை ஏறியுள்ள பவன் கல்யானை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியும் புகழ்ந்து பேசினார்.