சித்த மருத்துவர் போட்ட ஊசி; நிமிடத்தில் பிரிந்த நோயாளியின் உயிர்-அதிர்ச்சி சம்பவம்!
சித்த மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட நோயாளி அடுத்த 10 நிமிடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்த மருத்துவர்
சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள பெருமாள்(50) என்பவர் சொந்தமாக சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். சித்த மருத்துவம் மட்டுமே படித்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (70) என்ற முதியவர் ஒருவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை சித்த மருத்துவரான பெருமாளிடம் அழைத்துச் சென்றனர்.
உயிர் பிரிந்த நோயாளி
அப்போது பெருமாள் அவரை பரிசோதித்து ஊசி ஒன்றை போட்டுள்ளார். ஆனால், எதிர் பாரத விதமாக போட்ட அடுத்த 10 நிமிடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த ராஜேந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இச்சம்பவம் குறித்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சித்த மருத்துவம் படித்த பெருமாள் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து போலீஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.