பெண் டாக்டர் தலை முடியை இழுத்து, தாக்கிய நோயாளி - பகீர் சம்பவம்!
நோயாளி ஒருவர் பெண் டாக்டர் தலை முடியை இழுத்து, தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கிய நோயாளி
திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் மையம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில், நோயாளி ஒருவர் பெண் டாக்டரை கடுமையாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் டாக்டர் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் துணை வேந்தரான டாக்டர் ஆர்.வி. குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மருத்துவர் கடிதம்
அதில், அவசர மருத்துவ துறையில் பணியில் இருந்தேன். அப்போது, பங்காரு ராஜு என்ற நோயாளி பின்னால் இருந்து வந்து, எதிர்பாராத வகையில் திடீரென தலைமுடியை பிடித்து இழுத்து, கட்டில் ஒன்றின் ஸ்டீல் தடியின் மீது மோதும்படி செய்து விட்டார்.
அப்போது, உதவிக்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இது பணியிடங்களில் பாதுகாப்பு பற்றிய தீவிர கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோயாளி கையில் ஆயுதம் எதுவும் வைத்திருந்தால், நிலைமை மோசமடைந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.