கன்னியாகுமரி அணுக் கனிம சுரங்கம் - டிடிவி தினகரன் எதிர்ப்பு
கன்னியாகுமரி அணு கனிம சுரங்க திட்டத்திற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
கன்னியாகுமரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிள்ளியூர் தாலுகாவிற்கு உள்பட்ட 5 கிராமங்களில் 1,144 ஹெக்டேர் பகுதியில் அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அணுக்கனிம சுரங்கம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரி மாவட்டம் மிடாலம், கீழ்மிடாலம், புத்தன்துறை, ஏழுதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (Indian Rare Earths Limited) நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
கிள்ளியூர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அணுக் கனிம சுரங்கங்களின் மூலம், இயற்கையாகவே அதிக கதிரியக்க தன்மை கொண்ட கிராமங்கள் அதிகளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் இத்திட்டத்திற்கு அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மறுபரிசீலனை
இனயம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் ஏற்கனவே கடலரிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கடற்கரையோடு, கடல்பகுதியின் வளமும் பெருமளவு பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இத்திட்டத்திற்கு எதிரான குரலை எழுப்பியுள்ளனர்.
தமிழக மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான திட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது - கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 20, 2024
கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம், கீழ்மிடாலம், புத்தன்துறை, ஏழுதேசம் உள்ளிட்ட…
எனவே, அணுக் கனிம சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மக்களுக்கும், மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.