வயநாடு நிலச்சரிவு; முன்பே எச்சரித்த வளர்ப்பு கிளி - உயிர்பிழைத்த பல குடும்பம்!
நிலச்சரிவு பற்றி முன்பே கிளி எச்சரித்து பலர் உயிர்பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு நிலச்சரிவு
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. . 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், நிலச்சரிவை முன்கூட்டியே கணித்த வளர்ப்பு கிளிகள் அதன் உரிமையாளர் உட்பட பல குடும்பங்களை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி, முண்டக்கையின் காலனி சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வினோத் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
வளர்ப்பு கிளி
அப்போது அவர்கள் தங்களது வளர்ப்பு கிளிகளையும் தங்களுடன் கொண்டு சென்றுள்ளனர். திய வீட்டிற்குச் சென்ற கின்கினி கிளிகள் முதல் நாள் எவ்வித சலசலப்பும் இன்றி சாதாரணமாக இருந்துள்ளன.
ஆனால் நிலச்சரிவு ஏற்பட்ட நாளன்று வழக்கத்திற்கு மாறாக கூண்டிற்குள் ஆக்ரோஷமாக பறந்து கொண்டு அங்கும், இங்குமாக தாவிக் கொண்டு இருந்துள்ளன. இதனால் ஏதோ அசம்பாவிதம் நடக்கவுள்ளது என கணித்தஉரிமையாளர் வினோத் வீட்டிற்கு வெளியில் சென்று பார்த்தபோது வழக்கத்திற்கு மாறாக வெள்ளம் சென்று கொண்டு இருந்தது.
பக்கத்து வீட்டாருக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த இயற்கை சீற்றம் குறித்து எச்சரித்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அண்டை வீட்டார், உறவினர்கள் பலர் வெள்ளம், காட்டாற்று வெள்ளமாக மாறுவதற்கு முன்பே வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் மறு நாள் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது. கிளிகளால் உயிர் பிழைத்த பலரும் தற்போது இந்த தகவலை வெளியிட்டு தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.