நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்கவேண்டும் - கிளப்பிவிட்ட இந்து மகாசபை தலைவர்!
இந்து மகாசபை தலைவர் நிலவை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சந்திரயான் 3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைத்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. இந்த சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
இந்த நிகழ்வை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடிமகிழ்ந்தனர். அந்த சமயத்தில் பிரதமர் மோடி வெளிநாடு பயணம் சென்றிருந்தார், அவர் இந்தியா வந்ததும் இஸ்ரோவிற்கு சென்று ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், சந்திரயான் லேண்ட் ஆன இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட்டார்.
இந்து மகாசபை தலைவர்
இந்நிலையில், அனைத்திந்திய இந்து மகாசபை தலைவர் சக்கரபாணி இது குறித்து பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர், "சந்திரயான் -3 தரையிறங்கும் இடத்திற்கு "சிவசக்தி" என்று பெயரிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததால், சந்திரனை "இந்து ராஷ்டிரா" என்று அறிவிக்க வேண்டும். மற்ற மதங்கள் மற்றும் நாடுகள் நிலவின் மீது உரிமை கோரும் முன் சந்திரனை "இந்து ராஷ்டிரம்" என்று அறிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்துடன் சந்திரனை ஒரு இந்து ராஷ்டிராவாக இந்தியா அறிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சந்திரயான் 3 தரையிறங்கும் இடத்தில் அதன் தலைநகராக சிவசக்தி முனை உருவாக்கப்பட வேண்டும், அதனால் எந்த பயங்கரவாதிகளும் ஜிஹாதி மனநிலையுடன் அங்கு செல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.