பட்டியலின பெண் சமைத்த உணவு.. மாணவர்களை சாப்பிடவிடாமல் தடுக்கும் பெற்றோர் - பரபரப்பு!
பெற்றோர்கள் தனது பிள்ளைகளை காலை உணவு சாப்பிடவிடாமல் தடுக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை உணவு திட்டம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா எட்டையாபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 11 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவினை சமைக்கும் பணியில் பட்டியலினத்தை சேர்ந்த முனியசெல்வி என்ற பெண் ஈடுபட்டு வருகிறார். அதனால் இந்த பட்டியலின பெண் சமைத்ததை தங்களது பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்று 9 மாணவர்களை சாப்பிட விடாமல் அவர்களது பெற்றோர் தடுத்தனர்.
விசாரணை
இந்நிலையில், இந்த தகவல் அறிந்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில்பட்டி கோட்டாட்சியர் கிறிஸ்டி பாய் தலைமையில் நடந்த இந்த விசாரணையில், தங்கள் பிள்ளைகளுக்கு காலை உணவு வேண்டாம் எனவும், மற்றபடி சாதி வேறுபாடு எல்லாம் பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும், இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அந்த பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். பெற்றோரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.