பெண் குழந்தையை கொன்று வீட்டில் புதைத்த பெற்றோர் - பகீர் பின்னணி!
பச்சிளம் பெண் குழந்தையை பெற்றோரே விஷப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் குழந்தை மோகம்
வேலூர், ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா(30). இவருக்கு ஆத்துமேடு பகுதியை சேர்ந்த டயானா (25) என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை இருந்தது.
இதில், தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று அந்த தம்பதி எதிர்பார்த்து இருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் சிசுவை கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, வீட்டின் அருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டிய இந்த தம்பதி, அதில் வடிந்த விஷம் நிறைந்த பாலை எடுத்து குழந்தைக்கு கொடுத்துள்ளனர். அதன்பின், அந்த குழந்தைக்கு வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து உயிரிழந்தது.
பெற்றோர் வெறிச்செயல்
தொடர்ந்து, தனது பெற்றோருக்கு போன் செய்த டயானா, குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக சொல்லி அழுது நடித்துள்ளார். மேலும், 2 வயதே ஆன மூத்த மகள் போர்வையை எடுக்கும் போது அது கைக்குழந்தை முகத்தில் விழுந்துவிட்டதாகவும் இதனால் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்துவிட்டதாக சொல்லி நாடகமாடியுள்ளனர்.
இதற்கிடையில் ஜீவா அவசர அவசரமாக வீட்டில் அருகிலேயே பள்ளம் தோண்டி குழந்தை சடலத்தை புதைத்துள்ளார். இதில் சந்தேகமடைந்த டயானாவின் தந்தை போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வருவாய்த்துறையினர் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகளில் இறங்கினர். இச்சம்பவத்திற்கு இடையில் கணவன், மனைவி இருவரும் காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.