விழுப்புரம் அருகே சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - உயிருடன் மீட்பு!
விழுப்புரத்தில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை சைல்டு லைன் அமைப்பினர் உயிருடன் மீட்டனர். தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் அடுத்த காவணிப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு ஒன்று சாலையில் கேட்பாரற்று கிடந்தது. குழந்தையின் அழுகைக் குரல் தொடர்ந்து கேட்டதால், அந்த வழியாகச் சென்றவர்கள் சாலையில் சென்று பார்த்தனர். அப்போது, துணியால் பெண் குழந்தை சுத்தப்பட்ட நிலையில் கிடந்தது. இதைப் பார்த்ததும், உடனடியாக பொதுமக்கள் அந்தப் பெண் குழந்தையை மீட்டனர்.
பின்னர், இதுகுறித்து மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர். குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அதிகாரிகள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் சாலையில் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.