2 ஆண்டுகளில் தி.மு.க செய்த துரோகங்கள் - பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்ட ஓ.பி.எஸ்

M K Stalin O Paneer Selvam Tamil nadu
By Vinothini May 07, 2023 02:00 PM GMT
Report

தி.மு.க ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது திராவிட மாடல் குறித்து ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓ.பி.எஸ் அறிக்கை

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் முடிவடைந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

இதன் காரணமாக, ‘ஈடில்லா ஆட்சி; இரண்டு ஆண்டே சாட்சி’ எனும் தலைப்பில் தமிழ்நாடு அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

panneerselvam-about-dravida-model

அந்த அறிக்கையில், “சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘திராவிட மாடல்’ என்ற போர்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா! வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம்.

தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் படும் அல்லல்களில் முக்கியமானவற்றை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்து.

பட்டியல்

தொடர்ந்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, கல்விக் கடன் இரத்து, நீட் தேர்வு இரத்து, அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு ஒரு நீண்ட பட்டியலை தந்துள்ளார்.

மேலும் அதில், “இதற்கெல்லாம் காரணம் கேட்டால் 'கடன்', 'நிதிப் பற்றாக்குறை' எனச் சொல்லும் தி.மு.க. அரசு, கடலில் பேனா திட்டத்தை அமல்படுத்த துடிப்பது சுயநலத்தின் உச்சகட்டம். பொது நலத் திட்டத்தை நிறைவேற்ற பணமில்லாத நிலையில் தன்னலத் திட்டம் எதற்கு என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜெயலலிதா வகுத்துத் தந்த அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாடு செல்கிறதா என்றால் அதுவும் இல்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்கேற்ப சட்டத்தை காக்க வேண்டியவர்களே சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மணல் கடத்தலும், ரேஷன் பொருட்கள் கடத்தலும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வன்முறைக் களமாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில், தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க 'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள். அவர்களுக்கு “வெண்ணெய் எது ? சுண்ணாம்பு எது ?” என்ற வித்தியாசம் தெரியும். தமிழர்கள் தங்களுடைய மனக் குமுறலை தி.மு.க. அரசுக்கு வெளிப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.