போர் தீவிரம் - பதவியை ராஜினாமா செய்த பாலஸ்தீன பிரதமர்!
பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தொடர் தாக்குதல்
காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், 30 ஆயிரம் பாலஸ்தீனர்களும், 1,200 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பாலஸ்தீனத்தில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த, அமெரிக்கா முயன்று வருவதாகவும், தொடர்ந்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் ராஜினாமா
இந்நிலையில், தற்போது முகம்மது ஷ்டய்யே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வெஸ்ட்பேங்க், ஜெருசலேமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், காசா பகுதியில் போர், இனப்படுகொலை மற்றும் பட்டினி கொடூரம் ஆகிய காரணங்களால் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.
காசா போர் முடிவுற்ற பிறகு பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்க ஆதரவுடன் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.