இஸ்ரேல் போர் - சென்னையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கங்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல்-ஹாமாஸ் போர் உச்சமடைந்துள்ளது. இதில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 8000த்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இத்தனை உயிர்களை பலிகொண்ட போரானது இன்னும் முடிவடையாமல் 3வது வாரமாக தொடர்கிறது. இந்த போரில் பல சக்திவாய்ந்த நாடுகள் இஸ்ரேல் பக்கமே நிற்கிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நத்தி வருகிறார்கள்.
சென்னையில் போராட்டம்
மேலும், தமிழகத்திலும் பல்வேறு கட்சி கூட்டமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசையும், அதற்கு ஆதரவு வழங்கிவரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்து சென்னை எழும்பூரில் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் "பாலஸ்தீனம் மீது யூத அரசு வன்மையான தாக்குதலை நடத்தி வருவதை கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்கள் சொந்த மண்ணுக்காக போராடுவதை பயங்கரவாதிகள் எனக் கூறுவதை ஏற்க முடியாது. காந்தி காலத்திலிருந்து பாலஸ்தீன ஆதரவையே இந்தியா எடுத்தது ,அதே நிலையை தற்போதும் தொடர வேண்டும். பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஓரணியில் நின்று நடவடிக்கை எடுப்பது மட்டும் மல்லாமல் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும்.
ஐ.நா.வின் போர் நிறுத்தத் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என தெரிவித்தனர். மேலும் இஸ்ரேல் ஆதரவு என்ற நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி மாற்றிக் கொள்வதுடன் ஐ.நா. மன்றத்தில் காந்தியடிகளின் வழிகாட்டல் மற்றும் பாரம்பரியமான நமது நிலைப்பாட்டின். அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீனம் அமைய இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.