திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாகச் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஒன்று கூடி போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.இதுமட்டுமின்றி திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை , திருப்பரங்குன்றத்தைத் தவிர்த்து பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.இதையடுத்து பழங்காநத்தத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இந்த போராட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.குறிப்பாக 1 மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் மலை காக்கும் போராட்டத்துக்காக பழங்காநத்தத்தில் பல ஆயிரம் பேர் திரண்டனர்.
அப்போது போராட்டத்தில் பேசிய எச்.ராஜா சிக்கந்தர் தர்கா குறித்தும், திமுக குறித்தும், காவல்துறை குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.