இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் புறக்கணிப்பு செய்வோம் - எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பிசிசிஐ முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2017 ல் கடைசியாக இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கைப்பற்றியது. அடுத்த சாம்பியன்ஸ் கோப்பை 2025 ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி பாக்கிஸ்தான் செல்ல மறுத்துள்ளதாகவும், இதனால் இந்திய அணி ஆடும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2023 ல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க மறுத்ததால் இந்திய அணி ஆடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நஷ்டத்தை சந்தித்ததாக புகார் தெரிவித்திருந்தது.
தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பல கோடி செலவில் மைதானங்களை தரம் உயர்த்தியுள்ளோம். இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த அனுமதிக்க மாட்டோம். இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் 2026 ல் இந்தியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளது.
2008-ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளவில்லை. சர்வதேச தொடர்களை தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் 2012-க்கு பிறகு இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை. எல்லைப் பிரச்னைகள் முடியும் வரை பாகிஸ்தானுடன் இந்திய அணி இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.