பாகிஸ்தானில் தலைப்பு செய்தியான சித்தராமையா கருத்து - பாஜக கடும் எதிர்ப்பு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியுள்ள சித்தராமையாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சித்தராமையா பேட்டி
காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 28 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தாக்குலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்தியா பதிலடி தரும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”பிரதமர் மோடி டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் பீகார் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். இது என்ன மாதிரியான செயல்? அவர் மக்களை ஏமாற்றுகிறார்.
பாஜக கண்டனம்
நாடு முழுவதும் அமைதி என்பது வேண்டும். மக்களை பாதுகாக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தற்போதைய தாக்குதலில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. நாங்கள் போருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. போர் என்பது இப்போது தேவையில்லை. இந்த தாக்குதல் என்பது உளவுத்துறை தோல்வி மற்றும் பாதுகாப்பு குறைபாட்டால் நடந்துள்ளது.
காஷ்மீர் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பாகிஸ்தானியர்கைள வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என்றார். இந்த பேட்டியை பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
'போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்' என்றும் செய்தி வாசிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது 'பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் முதல்வர் சித்தராமையா இந்தியாவை விட்டு வெளியேறி, பாகிஸ்தானுக்கு குடியேற வேண்டும்' என்று, பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சித்தராமையா, ”நாட்டின் அமைதி, பாதுகாப்பு, நல்லிணக்கம், இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் யாராக இருந்தாலும், அவர்களை சும்மா விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. 'பாகிஸ்தான் மீது போர் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே போர் நடக்கும் என்று தான் கூறினேன். எனது பேச்சை பா.ஜ., தலைவர்கள் திரித்து விட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.