இனி பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் போட்டி கிடையாது - பிசிசிஐ அதிரடி முடிவு
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
பிசிசிஐ முடிவு
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "காஷ்மீர் தாக்குதலை கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசு என்ன சொன்னாலும் அதைச் செய்வோம்.
அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. அதேபோல, இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம்.
ஆனால் ஐசிசி போட்டிகள் வரும்போது ஐசிசி வலியுறுத்தல் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம். ஐசிசிக்கும் இப்போது என்ன நடக்கிறது என்பது தெரியும்" என தெரிவித்துள்ளார்.