பாகிஸ்தான் செல்கிறாரா மோடி? முக்கிய மாநாட்டுக்கு வந்த அழைப்பு
பாகிஸ்தானில் நடைபெற உள்ள எஸ்சிஓ மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்சிஓ மாநாடு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாடு வரும் அக்டோபர் 15-16 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்விற்கு முன்னதாக அமைச்சர்கள் அளவிலான கூட்டம் மற்றும் பல மூத்த அதிகாரிகள் சந்திப்புகள் நடைபெறும்.
இதில் SCO உறுப்பு நாடுகளிடையே நிதி, பொருளாதார, சமூக-கலாச்சார மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு பற்றிய விவாதங்கள் நடத்தப்படும். இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.
நரேந்திர மோடி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச், "இஸ்லாமாபாத்தில் SCO கூட்டத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. சில நாடுகள் கூட்டத்தில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையே சுமூக உறவு இல்லாத நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா சார்பாக அமைச்சர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் கஜகஸ்தானில் நடைபெற்ற எஸ்சிஓ-வின் 24வது ஆண்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை, இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்றார்.