சாம்பியன்ஸ் டிராஃபியில் கிரிக்கெட் வீரர்களை கடத்த திட்டம் - எச்சரிக்கும் உளவுத்துறை
கிரிக்கெட் வீரர்கள் அல்லது ரசிகர்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராஃபி
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என கருதும் இந்திய அரசு, அதன் பிறகு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு விளையாட செல்ல அனுமதிக்கவில்லை.
உளவுத்துறை எச்சரிக்கை
அதே போல், தற்போது இந்திய அணி ஆடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் அல்லது வெளிநாடு ரசிகர்களை கடத்த ISKP என்னும் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை, அந்த நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள் மற்றும் மைதானங்களில் 10,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்த போது, இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த அணியும் பாகிஸ்தானுக்கு செல்ல ஆர்வம் காட்டாத நிலையில், சில ஆண்டுகளாக வெளிநாடு அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இந்நிலையில், உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.