இந்தியா அருகே போர் பதற்றம்; குண்டு மழை பொழிந்த பாகிஸ்தான் விமானங்கள் - 15 பேர் பலி
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
தீவிரவாத தாக்குதல்
ரஷ்யா - உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் நடந்து வரும் நிலையில், இந்தியாவின் எல்லையை பகிர்ந்து வரும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 21.12.2024 அன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் விமான தாக்குதல்
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதக் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல், ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் நுழைந்த பாகிஸ்தான் விமான படை குண்டு மழை பொழிந்துள்ளது.
இந்த தாக்குதலில்பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 7 கிராமங்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.