அணுகுண்டுகளை வீசுமா ரஷ்யா? ஒப்புதல் அளித்த புதின்; பதற்றத்தில் உலக நாடுகள்
அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர்
நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்கியது. 1,000 நாட்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆயுதங்கள் வழங்கி மறைமுகமாக ஆதரித்து வருகிறது.
ATACMS ஏவுகணை
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவேன் என பேசி இருந்தார். இந்நிலையில் ATACMS ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் 300 கி.மீ வரை பயணித்து இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைகளை பயன்படுத்த வெகு காலமாக உக்ரைன் அனுமதி கேட்டு கொண்டிருந்த நிலையில், இன்னும் 2 மாத காலத்தில் தனது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் பைடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதின் ஒப்புதல்
முன்னதாகவே இது குறித்து பேசிய ரஷ்யா அதிபர் புதின், "இந்த அனுமதி வழங்குவது 'RED LINE'. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் போரில் நேரடியாக ஈடுபடுவதாக அர்த்தம்" என தெரிவித்திருந்தார்.
தற்போது அணு ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தத்தை புதிப்பித்து அதில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணுஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் புதின் கையொப்பமிட்டுள்ளார்.
அணு ஆயுதங்கள்
இது தொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "அமெரிக்கா தனது ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது, எங்கள் தேசியப் பாதுகாப்பிற்கு பிரச்சினையை ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என கூறினார்.
ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா என்ற கேள்விக்கு, "எங்களுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை. நிலைமை கையை மீறி போனால் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.
ரஷ்யா 5580 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மூன்றாம் உலக போர் மூளும் அபாயம் உள்ளது என உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.