இந்த கெளரவம் இந்தியாவுக்குதான் - சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷண் விருது!
மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை
2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 117 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்ஜித் சிங், பத்ம பூஷன் விருதை சுந்தர் பிச்சையிடம் வழங்கினார். இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறுகையில்,
பத்ம பூஷன்
"இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. எனது குடும்பத்தினர் இருக்கும் இந்த வேளையில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது. விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.
என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன். நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது.
கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகும். எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.