2026 தேர்தலில் நாம் யாருனு காட்ட வேண்டும் - பா.ரஞ்சித் சூளுரை
2026 தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
சில மாதங்களுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தக வெளியீடு
இந்நிலையில் நேற்று (16.11.2024) ஆம்ஸ்ட்ராங் பற்றிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆர்ம்ஸ்ட்ராங், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய பா.ரஞ்சித், "ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன. அதை வெளியில் கொண்டுவர வேண்டிய தேவையிருக்கிறது. இரண்டு ரவுடி கும்பல்களின் மோதல்கள் என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையில்லை. ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்ட தலைவர் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது.
பா.ரஞ்சித்
ஒரு கட்சியின் தலைவரை கொலை செய்ய கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திட்டம் தீட்டியுள்ளனர். இங்குள்ள உளவுத்துறை, போலீசார் ஏன் இதை பற்றி சொல்லவில்லை இது கேள்வியை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாகக் கண்டித்து கேள்விகளை எழுப்புவதாகப் பலரும் கூறுகின்றனர். திமுக, அதிமுக என எந்த அரசாக இருந்தாலும் எங்கள் உரிமைகளை, கேள்விகளை நாங்கள் பயமின்றி கேட்போம்.
இங்கு பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். 2026 தேர்தலில் ஒரு திட்டத்தோடு நாம் களம் காண வேண்டும். திருவள்ளூர் தொகுதியில் திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெற்றி பெற வைக்க நாம் இப்போது இருந்தே வேலை பார்க்க வேண்டும். நாம யாருன்னு காட்டணும். அதுதான் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.
நாம் வெற்றி பெறுகிறோமா தோல்வியடைகிறோமா என்பது முக்கியமில்லை. சண்டை செய்யணும் அதுதான் முக்கியம். களத்தில் இறங்கி வேலை செய்ய நான் தயார். வட தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு நமக்கு உண்டு. அதை மீள் உருவாக்கும் செய்யும் வாய்ப்பை உருவாக்குவோம். இந்தியாவில் 3% இருப்பவர்கள் இந்த நாட்டை ஆளும்போது நம்மால் ஏன் முடியாது? அரசியல் அதிகாரத்தில் நமக்கான தேவைகளை பெற திருமதி ஆம்ஸ்ட்ராங்கை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்" என பேசினார்