2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இப்படிதான் வெற்றிபெறப்போகிறது - ரகசியம் உடைத்த ப.சிதம்பரம்!
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் நடக்க உள்ளது, அதனால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் பாஜகவை அகற்றி காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கத் துடிக்கிறது.
எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட காங்கிரஸ் கட்சி கடுமையாக முயற்சித்து வருகிறது. ஆனாலும் திரிணாமூல், ஆம் ஆத்மி, சந்திரசேகர்ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைய தற்போது வரை விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதனிடையே அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ஜூன் 12-ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் பேட்டி
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், "நாடாளுமன்ற தேர்தல் யுக்தி குறித்தெல்லாம் என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால் பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம்.
என் கருத்துப்படி, பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், 400 முதல் 450 இடங்களில் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தும்.
அதுதான் ஆசை அதுவே லட்சியம் . ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க இருக்கிறது.
மேற்கூறியதை செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது நடக்கும். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும்" எனக் கூறியுள்ளார்.