மோடிக்கு வரலாறு தெரியவில்லை ; ஏதோ பேசி உளறி வருகிறார் - ப.சிதம்பரம் ஆவேசம்!
இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசுகிறார் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மோடி உளறுகிறார்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் முதல் மட்டும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தது. தற்போது வட இந்திய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து வருகிறது.
பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள், மக்களிடையே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்காக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு இருக்காது என்று பேசியிருந்தார். இதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
ப.சிதம்பரம் ஆவேசம்
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என காங்கிரஸ் உறுதி தருமா என்று மோடி வரலாறு தெரியாமல் கேட்கிறார். இதுபோன்ற அறிவிப்போ, வாக்குறுதியோ காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இல்லை. தேர்தல் பரப்புரைகளில் இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பேசி உளறி வருகிறார்.
அரசியலமைப்பு சட்டப்படியே எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என மோடிக்கு தெரியவில்லை.காங்கிரஸ் ஆட்சியில்தான் பட்டியல், பழங்குடியினர் இடஒதுக்கீடு அமலானது என்ற வரலாற்றை மோடி மறந்துவிட்டார். ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்கியது காங்கிரஸ் கட்சிதான்.
1951ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் ஓபிசி பிரிவினருக்கு 27சதவீதம் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்பதை மோடி மறந்து விட்டார். இந்த வரலாறு அவருக்கு தெரியவில்லை. 2014 முதல் பாஜக அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது" என்று கடுமையாக சாடியுள்ளார்.