சொந்த கடையிலே ஆள் வைத்து நகை திருட்டு; அதிர்ந்த போலீஸ் - சிக்கியது எப்படி?
சொந்த கடையிலே ஆள் வைத்து நகை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 சவரன் நகை கொள்ளை
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பிருந்தாவன் அவென்யூ பகுதியில் உள்ள தன்னுடைய நகைக்கடையில் கடந்த 15.8.2024 அன்று 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கடை உரிமையாளர் ரமேஷ்குமார் என்பவர் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய திருமுல்லைவாயல் போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதன் பின் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
ராஜஸ்தான்
காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் ராஜஸ்தானில் முகாமிட்ட காவல்துறையினர், கொள்ளையில் ஈடுபட்ட ஹர்ஷட் குமார் பத், சுரேந்தர் சிங் இருவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதன் பின் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளையடித்த நகைகள் அனைத்தும் தங்க நகைகள் இல்லை போலி நகைகள் எனத் தெரியவந்ததும், ஆத்திரத்தில் அந்த நகைகளை ரயில்வே பாலத்தில் உள்ள தண்டவாளத்தில் வீசிவிட்டதாக தெரிவித்தனர். மேலும், நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமார் சொல்லிதான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
கடனால் நாடகம்
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் நகை கடை உரிமையாளர் ரமேஷ்குமார் அழைத்து விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் லட்சக்கணக்கில் கடன் உள்ளத்து அதை திருப்ப செலுத்த முடியாத நிலையில் இவ்வாறு நாடகம் ஆடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன் பின் கடை உரிமையாளர் ரமேஷ்குமார் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட ஹர்ஷட் குமார் பத், சுரேந்தர் சிங் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.