தொலைக்காட்சி தொடரை பார்த்து மகளை கொன்ற தாய் - சூட்கேசில் கிடந்த சடலம்
தொலைக்காட்சி தொடரை பார்த்து மகளை தாய் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கொலை
பிகார் மாநிலம் முஸாஃபர்நகரில், குழந்தையின் சடலம் ஒன்று சூட்கேசில் அடைக்கப்பட்டு குப்பையில் வீசப்பட்டுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, குழந்தையின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, குழநதையின் வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். சம்பவம் நடந்தது முதல் குழந்தையின் தாய் காணாமல் போய் உள்ளார். அவரது தந்தையை தொலைபேசியில் அழைத்த போது அவர் தனது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காதலன் வீட்டில் தஞ்சம்
அந்த வீட்டின் தரை மற்றும் பாத்திரங்களைத் தேய்க்கும் சிங்கில் ரத்தக் கறை இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். குழந்தையின் தாயின் இருப்பிடத்தை அவரது செல்ஃபோன் சிக்னல் மூலம் கண்டுபிடித்த காவல்துறையினர், அங்குச் சென்று பார்த்தபோது அவர் தனது காதலன் வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. இதன் பின் குழந்தையின் தாயும், அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் காஜல் என்பதும் அவர் தனது கணவரை விட்டுப் பிரிந்து, காதலனுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அவரது காதலனோ, காஜலின் மூன்று வயது மகளை உடன் அழைத்து வர ஒப்புக்கொள்ளவில்லை.
தொலைக்காட்சி தொடர்
இதனால், தனது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் வைத்து குப்பையில் வீசியிருக்கிறார் காஜல். இதன் பின் தனது காதலருடன் சென்று அவரது வீட்டில் வசித்துள்ளார். கிரைம் பேட்ரல்(Crime Patrol) என்ற தொலைக்காட்சி தொடரில் வரும் குற்றச்சம்பவங்களை பார்த்தே தனது மகளை கொன்றதாக வாக்குமூலம் அளித்தது காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தையை தாய் மட்டும் தான் கொன்றாரா அல்லது கொலையில் காதலனுக்கும் பங்கு உண்டா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.