இப்படியொரு தீபாவளி போனஸா? ஊழியர்களுக்கு புல்லட் பைக் பரிசளித்த முதலாளி!
நீலகிரி மாவட்டத்தில் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் பரிசளித்துள்ளார்.
தீபாவளி போனஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றனர். அதில் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை, இனிப்பு, கார வகைகளுடன் பட்டாசு, புதிய ஆடைகளை உள்ளிட்டவைகளை நிறுவனங்கள் கொடுத்து வருவது வழக்கம்.
ஆனால் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதரமாக தேயிலை தொழில் இருந்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், சிவக்குமார் பொன்னுசாமி என்ற தொழிலதிபருக்கு சொந்தமான சிவகாமி எஸ்டேட் என்ற தேயிலை தோட்டம் உள்ளது.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீழ் கோத்தகிரி பகுதியில் தேயிலை சாகுபடி, காளான் தயாரிப்பு, கொய்மலர் சாகுபடி, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறார்.
இன்ப அதிர்ச்சி
இந்நிலையில் ஆண்டுதோறும் ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் குறிப்பிட்ட தொகையும் தீபாவளி போனஸாக பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிவக்குமார் இம்முறை அவரின் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களை தேர்வு செய்து ராயல் என்பீல்டு புல்லட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த பரிசை பெற்ற ஊழியர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும், தனது ஊழியர்களுடன் ஜாலியாக பைக்கில் ரைடும் சென்றுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்து போன ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
பின்னர் ஊழியர்களிடம் பேசிய அவர் "இந்த நிறுவனம் இந்தளவு வளர அனைவரின் கடின உழைப்பும் தான் காரணம். நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு கொடுத்துள்ளேன். பணி என்பது முக்கியம் தான். அதைவிட குடும்பம் மிக முக்கியம். எனவே குடும்பத்திற்காக அதிக நேரத்தை ஒதுக்குங்கள்” என தெரிவித்துள்ளார்.