மக்களே கவனம்..அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ்? சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ்
கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெஸ்ட் நைல் என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.
சாதாரணமாக தென்படும் தலைவலி, வாந்தி, காய்ச்சல் உடல் வலி போன்றவை தான் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா , பலவீனம், பக்கவாதம் , மூளைக்காய்ச்சல் ஆகியவை ஒரு சிலருக்கு ஏற்படுமாம்.
முக்கிய அறிவிப்பு
குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியவில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், கொசு பரவலை பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
'க்யூலெக்ஸ்' வகை கொசுக்களால் மனிதர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பரவக்கூடும். இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுவதாக கூறப்படுகிறது.ஆனால், இது மனிதர்களுக்கிடையே பரவும் தன்மை இல்லை என்றாலும், கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
வைரஸ் தொற்றுக்கு ஆளாபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசிய பகுதிகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. எலைசா, பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக கண்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.