மனிதர்களை வேட்டையாடும் ஓநாய்கள்..உபி-யில் 2003ல் நடந்த பயங்கர சம்பவம் !இதுதான் காரணமா?
உத்தர பிரதேசத்தில் மனிதர்களை ஓநாய்கள் தாக்குவதற்கு குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .
ஓநாய்கள்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த ஓநாய்க் கூட்டங்களால் சுமார் 50 கிராம மக்கள் தூக்கமின்றி அஞ்சி நடுங்குகின்றனர்.தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஓநாய்களைப் பிடிக்க ஆங்காங்கே பொறிகள், கூண்டுகள் வைக்கப்பட்டத்தில் 6 ஓநாய்கள் பிடிபட்டனர்.மேலும் தெர்மல் டிரோன்கள் மூலம் அவற்றைக் கண்டறிந்து பிடித்து வருகின்றனர்.
இதனையடுத்து பெஹராயிச் மாவட்டத்திற்கு உட்பட்ட 50 கிராம மக்களின் நலன் கருதி, உயிர்ப் பலி வாங்கும் ஓநாய்களைக் கண்டதும் சுட உ.பி. அரசு வனத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தச் சூழலில் திடீரென ஓநாய்கள் ஏன் இப்படி மனிதர்களைத் தாக்குகின்றன என்ற கேள்வியை ஆய்வு செய்த போது விடை கிடைத்துள்ளது.
பயங்கர சம்பவம்
சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றங்கரையோரம் இருந்த ஒரு குகையில் இருந்த ஓநாய் குட்டிகளை அப்பகுதி விவசாயிகள் சிலர் அச்சத்தின் காரணமாகத் தீயில் வீசிக் கொன்றதாகவும், இதனால், ஆத்திரமடைந்த ஓநாய்க் கூட்டம், அந்தச் சுற்றுப்பகுதியில் வசித்த மக்களின் குழந்தைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது .
இதேபோல், பல்ராம்பூர் மாவட்டத்தில் 2003ஆம் ஆண்டு ஓநாய்கள் அதிகம் வாழ்ந்த வனப்பகுதிகளை விவசாயிகள் தங்கள் சுய லாபத்திற்காக அழித்ததால், அந்தப் பகுதியில் வசித்த குழந்தைகளை அதிகளவில் ஓநாய்களால் தாக்கப்பட்டதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.