ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் - எடப்பாடி அதிரடி..!!
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
இன்று(27-23-23) கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணி கிடையாது என்று தெளிவாகவே சொல்லி விட்டோம் என தெரிவித்து, இது எங்கள் கட்சி பிரச்சினை, இதில் திமுகவிற்கு ஏன் பதட்டம் வருகின்றது? என்று வினவினார்.
கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு தகுந்தவாறு இருக்கும் என்ற எடப்பாடி பழனிசாமி, திமுக தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்த கட்சியா என்றும் 66 இடங்களில் அதிமுக எம்.எல்.ஏ வெற்றி பெற்று இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரு சதவீத வாக்கு மட்டுமே வித்தியாசம் இருக்கின்றது என்பதை நினைவூட்டிய அவர், 45 பேர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் கூறினார்.
ஓபிஎஸ் தான் போவார்
தொடர்ந்து அவரிடம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் கருத்திற்கு பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தான் சிறைக்கு செல்ல தயாராகின்றார் என்று தெரிவித்து, அவர் மீதான வழக்குகள் விசாரணை வருகின்றது என்றார்.
என் மீது ஏதாவது பழியை சொல்லி தப்பிக்க பார்க்கின்றார் என விமர்சித்து, ரகசியங்களை ஓபிஎஸ் சொல்லட்டும் என்றும் அப்படி ஏதாவது இருந்தால் திமுக என்னை விட்டு விடுவாங்களா? என்று வினவி, என்ன ரகசியம் என்றாலும் சொல்லட்டும் என்றும் பல வழக்குகளை சந்தித்து கொண்டு இருக்கும் அவர்தான் உள்ளே போவார் என்று அதிரடியாக தெரிவித்தார்.