இதெல்லாம் ஏத்துக்க முடியாது - முதன்முறையாக பாஜகவை எதிர்த்துப் பேசிய ஓபிஎஸ்!
மும்மொழிக் கொள்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை
உத்தர பிரதேசம், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
ஓபிஎஸ் கண்டனம்
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)
திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏற்று கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.
எனவே, மும் மொழிக் கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.